உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

உளுந்தூர்பேட்டை பஸ்நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கெட்டுப்போன 200 கிலோ இனிப்பு, காரத்தை பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள இனிப்பு கடை, குளிர்பான கடை முட்டை கடை, டீ கடை, காய்கறி கடை, ஓட்டல்கள் என 20-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் 200 கிலோ இனிப்பு, கார வகைகள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். சில கடைகளில் சமையலுக்காக வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியதை கண்டுபிடித்து அவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அபராதம் விதித்ததோடு கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர். இதே போல் ஒரு இறைச்சி கடையில் கெட்டுப்போன மட்டன் மற்றும் சிக்கன் ஆகியவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கடைக்கு அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.