சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் லதா வரவேற்றார். இதில் மாநிலத்தலைவர் கலா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட செயலாளர் ராமதேவன், மாநில செயலாளர் சிவபழனி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளாளர் வேம்பு நன்றி கூறினார்.