கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி


கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
x

கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி

இயேசு கிறிஸ்து துன்பங்களை அனுபவித்து இறப்பதற்கு முந்தைய நாள் இரவு சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு உண்டார். அப்போது அவர் பிறருக்கு பணி செய்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்தார். அதை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்களால் புனித வாரத்தில் வரும் வியாழக்கிழமை, பெரிய வியாழன் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக பெரிய வியாழன் அன்று கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியின்போது, இயேசுவின் சீடர்கள் 12 பேரை உணர்த்தும் வகையில் 12 கிறிஸ்தவர்களின் பாதங்களை அருட்பணியாளர்கள் கழுவி துடைத்து முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதன்படி திருச்சி மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களான மேலப்புதூர் மரியன்னை ஆலயம், உலகமீட்பர் பசிலிக்கா, கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் நேற்று மாலை சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றது. அப்போது, 12 பேரின் பாதங்களை அருட்பணியாளர்கள் கழுவி துடைத்து முத்தமிட்டனர். இந்த திருப்பலிகளில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் முசிறியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை குழந்தை ராஜ் மறைவுரையாற்றினார். பின்னர் நடந்த பாதம் கழுவும் நிகழ்ச்சியில் தேவாலயத்திற்கு வந்தவர்களின் பாதங்களை பங்குத்தந்தை கழுவி, முத்தமிட்டு அவர்களுக்கு பொருள் உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நாளை நள்ளிரவு இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.


Next Story