விவசாயிகள், கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள், கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு செலுத்த 44 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் தயாராக இருப்பதாகவும், அவற்றை கால்நடைகளுக்கு செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள்க்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பஞ்சாயத்து காலாங்கரை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கான பிரிசெல்லோசிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் மற்றும் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பிரிசெல்லோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மனிதர்களுக்கும் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மாடுகளுக்கு குறிப்பாக 4 முதல் 8 வாரம் உள்ள கன்றுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். இந்த வாரம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
44 ஆயிரம் டோஸ் தடுப்பூசி
ஒவ்வொரு வட்டாரம் மற்றும் கிராமத்துக்கு கால்நடை மருத்துவர்கள் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர். பிரிசெல்லோசிஸ் தடுப்பூசி 44 ஆயிரம் டோஸ்கள் மற்றும் கோழி கழிச்சல் தடுப்பூசி 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸ்கள் நமது மாவட்டத்துக்கு வந்து உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலான டோஸ்கள் பெறப்பட்டு வழங்கப்படும். எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகள் மற்றும் கோழிகளுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.