சம்பா சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


சம்பா சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x

சம்பா சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தஞ்சையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார். தாசில்தார் சுந்தரச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தோழகிரிப்பட்டி கோவிந்தராசு:- கரும்புக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்க வேண்டும். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் டிசம்பர் மாதம் 2-ந் தேதி கரும்பு அரவை பணியை தொடங்க முடிவு செய்துள்ளனர். கரும்பு அரவை பணியை கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் முன்கூட்டியே தொடங்க வேண்டும்.

மும்முனை மின்சாரம்

பாச்சூர் புண்ணியமூர்த்தி:- தினமும் 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோதாது. இதனால் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தினமும் 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். நீர்நிலை, புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்.

திருவோணம் ராமசாமி:- விதை நிலக்கடலை தரமானதாக வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மையகரம் ரவிச்சந்தர்:- குறுவை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது ஏமாற்றம்அளிக்கிறது. ஒரு ஏக்கருக்கே ரூ.35 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 400 தான் கிடைக்கும். எனவே இதை மறுபரிசீலனை செய்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.

இழப்பீடு

திருவோணம் வீரப்பன்:- 2022-23-ம் ஆண்டுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்க்காமல், 4 கிராமங்களை மட்டுமே சேர்ந்துள்ளனர். தளிகைவிடுதி கிராமத்தில் சம்பா பயிர் பாதிக்கப்பட்டதால் அதிகாரிகள் வந்து கணக்கெடுப்பு செய்தனர். ஆனால் அந்த கிராமத்திற்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் சேர்த்து காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். சம்பா சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஒரத்தநாடு பழனியப்பன்:- இந்த ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படாததால் நிலக்கடலை அதிகஅளவில் சாகுபடி செய்யப்படும். இதனால் விதை நிலக்கடலையை அதிகஅளவு இருப்பில் வைத்து அரசு மூலம் வழங்க தயாராக இருக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்டாட்சியர் இலக்கியா உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


Next Story