அரசு மானியத்துடன் விவசாயிகளுக்குமின்மோட்டார் பம்பு செட்


அரசு மானியத்துடன் விவசாயிகளுக்குமின்மோட்டார் பம்பு செட்
x

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்துடன் பம்பு செட் வாங்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்துடன் பம்பு செட் வாங்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

மின் மோட்டார் பம்பு செட்டுகள்

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்துடன் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்தவும், பயிர் உற்பத்தியினை அதிகரிக்கவும் நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பழைய திறன் குறைந்த மின் மோட்டார் பம்புசெட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது.

எனவே தமிழ்நாடு அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார்கள் வாங்கவும், புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின் மோட்டார்கள் வாங்கவும் இத்திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க பின்னேற்பு மானியமாக ரூ.15 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க வேண்டும்.இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து சொட்டுநீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து இருத்தல் வேண்டும்.

விவசாயிகளுக்கு முன்னுரிமை

அவ்வாறு இல்லையெனில் புதிதாக சொட்டு நீர்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க https://tnhorticulture.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற திருவண்ணாமலை, கீழ்பென்னத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளூர் தாலுகா விவசாயிகள் திருவண்ணாமலை வேங்கிக்கால் குறிஞ்சி நகர் அரசினர் பூங்கா எதிரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா விவசாயிகள் ஆரணி மில்லர் சாலை வேளாண் வணிக விற்பனை மைய வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story