முதல் போக பாசனத்துக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு
முதல் போக பாசனத்துக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் போக பாசனத்துக்காக கடந்த 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அப்போது பாசனத்திற்கு 200 கனஅடி, தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கனஅடி வீதம் என வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து நெற்பயிர் சாகுபடி செய்து உள்ளனர். இதற்கிடையே கடந்த 5-ந்தேதி கூடுதலாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது விவசாயிகள் வயல்களில் உழவு பணி செய்து வருகின்றனர்.
கூடுதல் தண்ணீர் திறப்பு
இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மேலும் கூடுதலாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 131.15 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 137 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 36 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி தற்போது 45 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.