மதுரையில் புதிய இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
மதுரையில் புதிய மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் புதிய மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம்
மதுரை வில்லாபுரம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் சந்துரு. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இரும்பு கதவுகளுக்கான கிரில் கம்பெனி வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
அதற்கு மின் இணைப்பு கேட்டு வில்லாபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்தார். மின் வாரிய ஊழியர்கள் வந்து இடத்தை பார்வையிட்டு சென்றனர்.
மேலும் அந்த மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் கோரிப்பாளையத்தை சேர்ந்த போர்மேன் வேல்முருகன் (வயது 40), புதிய மின் இணைப்பு வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்தால்தான் அதற்குரிய வேலையை முடித்து தருவோம் என சந்துருவிடம் தெரிவித்துள்ளார்.
கைது
இதுகுறித்து சந்துரு, மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதற்காக நேற்று சந்துருவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர்.
சந்துரு வில்லாபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வேல்முருகனிடம் அந்த பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா மற்றும் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த அதிரடி நடவடிக்கை மின்வாரிய ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.