மண்பாண்ட தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்;அழகான மண்பாண்டங்கள் செய்யும் பட்டதாரி தம்பதி கோரிக்கை


மண்பாண்ட தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்;அழகான மண்பாண்டங்கள் செய்யும் பட்டதாரி தம்பதி கோரிக்கை
x

மண்பாண்ட தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அழகான மண்பாண்டங்கள் செய்யும் பட்டதாரி தம்பதி கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஈரோடு

மொடக்குறிச்சி

மண்பாண்ட தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அழகான மண்பாண்டங்கள் செய்யும் பட்டதாரி தம்பதி கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மண் பாண்டங்கள்

மண் பானையில் சமைத்து சாப்பிட்ட நம் தாத்தா, பாட்டனார்கள் சர்வ சாதாரணமாக 90 வயதை தொட்டார்கள். மண் பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகளின் சத்து எந்த வகையிலும் மாறாது.

எதிர்மறை வினையாகாது. ஆனால் காலச்சக்கரத்தின் மாற்றம், விரைவாக சமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் இடையில் சுமார் அரை நூற்றாண்டுகள் மண்பாண்டங்கள் வெறும் காட்சி பொருளாகின.

நட்சத்திர ஓட்டல்களில்

பீட்சா, பர்ஹர், சவர்மாக்களுக்கு இடையே மண்பானையில் சமைத்த மீன்குழம்பு, புளிக்குழம்பு, பழைய சோறு, நீராகாரமும் நட்சத்திர ஓட்டல்களின் மேஜையில் இப்போது இடம்பிடித்து உள்ளது. ஆனாலும் இந்த தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் சொற்பமாகவே உள்ளனர். அதிலும் பரம்பரை தொழிலை விடக்கூடாது என்று எங்கோ ஒரு சில முதியவர்கள் மண்பாண்ட தொழிலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன் பள்ளியை சேர்ந்த பட்டதாரிகளான கனகராஜ், அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மண்பாண்ட தொழிலை ரசித்து அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்று வருகிறார்கள். இதுபற்றி கனகராஜ் கூறுகையில், 'என் தந்தை சண்முகம். தாய் மல்லிகா. எங்களின் குலத்தொழிலான மண்பாண்டங்களை செய்து வந்தார்கள். நான் பி.ஏ., பி.எட். படித்தாலும் என் மனம் வேறு வேலைக்கு செல்லவில்லை. ஏன் பட்டதாரி மண்பாண்டம் செய்யக்கூடாதா? என்று பரம்பரை தொழிலை நேசித்து இதில் இறங்கினேன். என் மனைவி ரம்யா எம்.ஏ. பி.எட் படித்தவர் ஆனாலும் எனக்கு துணையாக ரசனையுடன் மண்பாண்ட தொழிலுக்கு உதவியாக இருக்கிறார்.

வேலை வாய்ப்பு

கோவில் குதிரைகள் பூவோடு பானைகள், தண்ணீர் ஜக்குகள், டம்ளர்கள், திருகு குழாய் பொருத்தப்பட்ட பானைகள், விலங்கு பொம்மைகள் என தொடங்கி இப்போது பிரஷர் குக்கர் வரை செய்து வருகிறோம். என் மனைவி செய்யும் வண்ண வண்ண பானைகள் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு பரிசு வாங்கி வருகிறது.

என்னுடைய மண்பாண்ட படைப்புகளை அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனத்தினர் கொள்முதல் செய்துகொள்கிறார்கள். ஆண்டுதோறும் சிறந்த தொழில் கலைஞர்களுக்கு பூம்புகார் நிறுவனம் விருது வழங்கி வருகிறது. அந்த விருதை நான் பெற்றுள்ளேன். கடந்த சுதந்திரதின விழாவில் என்னையும், என் மனைவியையும் பாராட்டி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விருது வழங்கினார்.

மேலும் அனுமன் பள்ளியில் மண்பாண்ட தொழிற்சாலை தொடங்கி, அதில் பலருக்கு வேைல வாய்ப்பையும் வழங்கி வருகிறேன்.

இலவச மின்சாரம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்படும் மத்திய அரசு நிறுவனத்தில் மண் ஆராய்ச்சி தொடர்பான படிப்பை படித்து முடித்துள்ளேன். பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மண்பாண்டம் செய்வதற்கான பயிற்சியும் அளித்து வருகிறோம்.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு என கூட்டுறவு சங்கம் அமைத்து அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அரசு தற்போது நலவாரியம் மூலம் மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மேலும் மண்பாண்டம் செய்ய மின்சாரத்தால் இயங்கும் சக்கரமும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மண்பாண்ட தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்கினால் அவர்கள் வாழ்வு மேம்படும். தைத்திருநாளுக்கு கரும்பு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இவைகளுடன் மண் அடுப்பு, மண்பானை வழங்கினால் மண்பாண்ட தொழிலாளர்களின் மனம் குளிரும். ஈரோடு மாவட்டத்தில் மண்பாண்ட தொழிற் பயி்ற்சி கல்லூரி அமைக்க வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களுடன் வரும் மண்பாண்ட பொருட்களை அரசே முழுமையாக சந்தைப்படுத்த வேண்டும். என்றார்.


Related Tags :
Next Story