காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்குகூடுதல் நிதி ஒதுக்கக்கோரி சென்னையில் மார்ச் 20-ந் தேதி ஆர்ப்பாட்டம்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி சென்னையில் மார்ச் 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
காவிரி -வைகை- குண்டாறு நீர் பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மிசா மாரிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுணன் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.760 கோடி ஒதுக்கியது. முதல் கட்ட பணிகள் நடைபெற்ற பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு 2 ஆண்டுகள் ஆகியும் ரூ.250 கோடி மட்டுமே தற்போதைய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதனால் திட்டம் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் மாதம் 20-ந் தேதி சென்னையில் சட்டமன்றம் முன்பாக 7 மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இத்திட்ட பணிகளில் குடியிருப்பு பகுதிகள் வந்தால் அவர்களுக்கு உரிய இழப்பீடுகளை தமிழக அரசு வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 லஞ்சமாக பெறப்படுவதை தடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த குவிண்டாலுக்கு ரூ.2,500-ஐ உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.