முதல்-அமைச்சர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது


முதல்-அமைச்சர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவினர்களில் ஆண், பெண் இருபாலர்களும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகள் விவரம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 முதல் 19 வயது வரை), கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம் கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து, மேசைபந்து ஆகிய 10 வகையான போட்டிகளும், பொதுப்பிரிவினர்களில் ஆண், பெண் (இருபாலர்களுக்கும் 15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்துபந்து ஆகிய போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (இருபாலர்களுக்கும்) 50 மீ. ஓட்டம், இறகுப்பந்து, பார்வைதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கையுந்துபந்து போட்டி, மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு 100 மீ. ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ. ஓட்டம், கபடி போட்டிகளும் நடத்தப்படும்.

அரசு ஊழியர் பிரிவில் இருபாலர்களுக்கும் கபடி, தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்துபந்து, சதுரங்கப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்வதன் மூலமாகவே பங்கேற்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 588 நபர்களுக்கும், ஒவ்வொரு மண்டலத்திலும் 40 நபர்கள் என மாநில அளவில் மொத்தம் 71,592 பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பில் சலுகை

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் 3 பரிசுகளாக தனிநபர் போட்டிகளுக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000, இரட்டையர் போட்டிகளுக்கு ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000, குழுப்போட்டிகளில் கபடி, கூடைப்பந்து, கையுந்துபந்து ஆகியவற்றிற்கு ரூ.36,000, ரூ.24,000, ரூ.12,000, கால்பந்து, ஆக்கி போட்டிகளுக்கு ரூ.54,000, ரூ.36,000, ரூ.16,000 பரிசாக வழங்கப்பட உள்ளது. அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் 3 இடங்கள் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்த வெற்றிக்கான முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்.

இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகைகள் பெற இயலும். மேலும், போட்டிகளில் திறமையானவர்களாக கண்டறியப்படும் வீரர், வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். இப்போட்டிகளில் அதிகப்படியான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்வதற்கு ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விளம்பரங்கள் செய்திடவும், பள்ளிகள் அளவில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தகவல் வழங்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் இப்போட்டியை சிறப்பான முறையில் நடத்த முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி) சித்ரா விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் உள்பட ஒருங்கிணைப்புக்குழு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story