இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் ஆர்த்தி (வயது 27), இவருக்கும் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 2-8-2019 அன்று திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரேம்குமார் தனது தாய் சுகந்தி, தந்தை சீனிவாசன் மற்றும் சகோதரி அனுஷா, அவரது கணவர் விஜயபாபு ஆகியோருடன் சேர்ந்து ஆர்த்தியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆர்த்தி கர்ப்பமானார். இதனையறிந்த அவரது கணவர் பிரேம்குமார், மாமனார் சீனிவாசன் ஆகியோர் கட்டாயப்படுத்தி ஆர்த்திக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆர்த்தி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் பிரேம்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.