மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த வெளிநாட்டு செஸ் வீரர்கள்


மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த வெளிநாட்டு செஸ் வீரர்கள்
x

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஒருநாள் மட்டும் செஸ் போட்டி நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு செஸ் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த ஓய்வு நாளை கழிக்கும் வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.

கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதிக்கு வந்த பல்வேறு நாட்டு சர்வதேச செஸ் வீரர்களை தமிழர்களின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விளக்கும் வகையில் வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, பேரூராட்சி துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முடிவில் கடற்கரை கோவிலின் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர்கள் தங்கள் நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் குழுவாக நின்று புகைப்படம், செல்பி எடுத்து கொண்டனர். செஸ் வீரர்கள் வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேற்று கடற்கரை கோவிலுக்கு குவைத் நாட்டை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 பேர் வந்திருந்தனர். மதியம் ஒரு மணி அளவில் அவர்கள் புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதை நிறுத்திவிட்டு எம்மதமும் சம்மதமே என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில் விஷ்ணுவும், சிவனும் வீற்றிருக்கும் கடற்கரை கோவில் புல்வெளி மைதானத்தில் முஸ்லிம் மத வழக்கப்படி சரியாக 1 மணி முதல் 1¼ மணி வரை அங்கேயே புல்தரையில் துணி விரித்து ஒரு மசூதியாக நினைத்து தொழுகையில் ஈடுபட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.


Next Story