தூத்துக்குடி அருகே பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்


தூத்துக்குடி அருகே பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 5 Jan 2024 1:32 AM GMT (Updated: 5 Jan 2024 2:03 AM GMT)

சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி,

சென்னையை சேர்ந்த 'கிளாசிக் ரன்' என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் 'ஆட்டோ ரிக்சா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில் 17-வது ஆண்டாக இந்த ஆண்டும் 'ஆட்டோ ரிக்சா சேலஞ்ச்' சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயணம் கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த பயணத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 26 வெளிநாட்டினர் 9 குழுக்களாக தனித்தனி ஆட்டோக்களில் புறப்பட்டனர்.

வெளிநாட்டினரே ஆட்டோக்களை ஓட்டியவாறு புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக நேற்று காலையில் தூத்துக்குடி வந்தனர். அங்கு பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், முத்துநகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். பின்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்கள் ஆட்டோக்களில் தூத்துக்குடியின் சாயர்புரம் அருகேயுள்ள தனியார் பண்ணைத் தோட்டத்துக்கு சென்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் 9 குழுக்களாக தனித்தனி புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விறகு அடுப்பில் மண்பானையில் பொங்கல் பொங்கி வழிந்ததும் 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகமாக குலவையிட்டு கொண்டாடினர். அனைவரும் பொங்கலை பரிமாறி உண்டனர்.

சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. விழாவையொட்டி தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடியதை சுற்று வட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர்.


Next Story