வெளிநாட்டினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை


வெளிநாட்டினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
x

வெளிநாட்டினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருச்சி

அகதிகள் சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாமில் போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வருதல், போதைப்பொருள் கடத்தல், பாஸ்போர்ட் தேதி காலாவதியாகிய பின்பும் நாடு திரும்பாமல் இந்தியாவில் தங்கி இருத்தல் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்குகளில் ஜாமீன் பெற்றாலும் நாடு திரும்பும்வரை அவர்களை வெளியே தங்க அனுமதிக்காமல் சிறப்பு முகாமில் வைத்துள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் தற்போது இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, பல்கேரியா, ருவாண்டா, சீனா, இந்தோனேஷியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 143 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

13 மணி நேரம் சோதனை

இந்தநிலையில் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இவர்களின் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 13 மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது.

முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரான குணசேகரன், பூக்குட்டி கண்ணன், திலீபன், ஸ்டான்லிபெர்னான்டோ கென்னடி, சுரங்காபிரதீப், கோட்ட காமினி, முகமதுஆஸ்மின், பண்டாரா, முகமதுரிகாஸ், தனுஷ்கா ரோஷன், நிசாந்தன், லடியா சந்திரசேனா உள்ளிட்ட 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்

மேலும் திருச்சி பொன்மலைப்பட்டியில் தங்கி இருந்த குணசேகரின் டிரைவர் விக்னேஷ் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளா மாநிலம் விழிஞ்ஜம் கடற்கரை பகுதியில் மீன்பிடி படகில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47. ரக துப்பாக்கிகள், 1000 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு முகாமில் இந்த சோதனை நடைபெற்றது தெரியவந்தது.

இந்த சோதனையில் முகாமில் இருந்து ரூ.2 லட்சத்து 52 ஆயிரம், 57 பவுன் தங்க நகைகள், 90 செல்போன்கள், 60 சிம்கார்டுகள், 1 மடிக்கணினி, 1 பென்டிரைவ் மற்றும் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை விசாரணை

இந்தநிலையில் சென்னையில் இருந்து மத்திய அமலாக்கத்துறை துணை இயக்குனர் அஜய்கவுர் தலைமையில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை திருச்சி சிறப்பு முகாமுக்கு வந்தனர். அங்கு அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் உள்ளிட்ட 12 வெளிநாட்டினரிடம் விசாரணை நடத்தினார்கள். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம், நகைகள் கொண்டு வந்தது எப்படி?. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா?. வங்கி மற்றும் செல்போன் நெட்வொர்க் மூலம் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

சிறப்பு முகாமில் அமலாக்கத்துறையினரின் விசாரணை நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு சிலரை காவலில் எடுத்தும் அமலாக்கத்துறை விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய மறுநாளில் அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி இருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story