ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று முதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இந்த பணி வருகிற 12-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது. உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடமாட்டம் குறித்து பதிவு
அப்போது முதல் மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்படும்.
அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். மேலும் யானைலத்தி, காட்டெருமைசாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரிமந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடைபெறும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது.
அறிக்கை சமர்ப்பிப்பு
இறுதி நாளான 12-ந் தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
உடுமலை வனச்சரகம் மானுப்பட்டி பிரிவு கொட்டையாறு சுற்றில் ஜல்லிமுத்தான்பாறை மற்றும் உலிவையாறு பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணிகளை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது புலி, சிறுத்தை உள்ளிட்ட பிற மாமிச உண்ணிகள் பெரிய தாவர உண்ணிகள் தடயங்கள் குறித்த கணக்கீடு பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சம், கரடியின் எச்சம், யானைகள் நடமாட்டம் குறித்தும் பதிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்வின் போது உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், வனவர் தங்கப்பிரகாஷ், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர். இதேபோன்று அமராவதி, கொழுமம், வந்தரவு உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் கணக்கெடுப்பணி நடைபெற்று வருகிறது.