சிறுவன் உள்பட 3 பேரின் உயிரை பறித்த கள்ளக்காதல் - ஆயுள் தண்டனை பெற்ற வாலிபர் சிறையில் தற்கொலை


சிறுவன் உள்பட 3 பேரின் உயிரை பறித்த கள்ளக்காதல் - ஆயுள் தண்டனை பெற்ற வாலிபர் சிறையில் தற்கொலை
x

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கத்தின் சிறப்பை திருவள்ளுவர் இந்த குறள் மூலமாக எளிதாக விளக்கி இருக்கிறார்.

ஒழுக்கம்... இந்த வார்த்தை சிறு வயதில் இருந்தே பெற்றோர், ஆசிரியர் என பெரியவர்கள் மூலமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஒழுக்கம் சிறிதளவிலும் தடம் புரண்டாலும் உயிரை விடுவதற்கு சமமாகும் என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். இந்த குறளுக்கும், நாம் பார்க்க இருக்கும் குற்ற சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது... என்பதே உங்களது முதல் கேள்வியாக உள்ளது.

ஆம்... இல்லறத்தில் சுயஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை, நாம் பார்க்க உள்ள சம்பவத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இல்லறத்திலும் நல்லொழுக்கம் மேலோங்க வேண்டும். பிறர்மனை நோக்கினால் நேரிடும் துன்பத்தை உண்மை சம்பவத்தின் மூலமாக இங்கே பார்க்க இருக்கிறோம்.

இரட்டை கொலை

கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி...

பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம்தான் அது. தாயும், 4 வயது மகனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள்ளே கொலை செய்யப்பட்டு கிடந்த நாள். இந்த சம்பவத்தின் பின்னணியில் மறைந்து கிடந்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

பவானி காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனால் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய விஜயா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதிரவன் (5) என்ற மகன் இருந்தான்.

மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருந்தது. தேன்கூடு போன்ற இந்த குடும்பம் திடீரென வீசிய ஒரு சூறாவளி சுழலில் சிக்கியது.எதிர்பாராத ஒரு விபத்தில் சிக்கினார் பழனிசாமி... மகன் கதிரவன் கைக்குழந்தையாக இருந்தபோதே பழனிசாமி உயிரிழந்தார். அதன் விளைவு... விஜயா மற்றும் அவரது குழந்தையின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

தறிப்பட்டறைக்கு வேலை...

கணவர் இறந்தபிறகு எப்படி வாழ்க்கை நடத்த போகிறோமோ... என்ற அச்சம் விஜயாவின் மனதில் எழுந்தது. தன்னை காப்பாற்றி கொள்ளவில்லை என்றாலும், தன்னையே நம்பி உலகுக்கு வந்த குழந்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதுவே மனதில் ஏற்பட்ட ஒரு உறுதியாக மாறியது.

கணவரை விபத்தில் பறிக்கொடுத்த துயரம் ஒருபுறம் இருந்தாலும், குழந்தையின் பசியை போக்க வேண்டும் என்பதை ஒரு தாயாக நினைத்து பார்த்தார், விஜயா. அருகில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்தார். நாட்கள் கடந்தன. குழந்தையும் வளர்ந்தது. கதிரவனை தனியார் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. வகுப்பில் கொண்டு சென்று சேர்த்தார்.

தினமும் காலையிலேயே வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு கொண்டு சென்று விடுவதற்கும், வகுப்பறை முடிந்த பிறகு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதற்கும் விஜயா சிரமம் அடைந்தார். எனவே ஆட்டோவில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வர ஏற்பாடு செய்தார்.

19-2-2007 அன்று... காலிங்கராயன்பாளையத்தையே அதிர செய்த நாள்... விஜயாவின் மகன் கதிரவனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செல்வதற்காக வழக்கம்போல் ஆட்டோ டிரைவரும் வந்தார். வீட்டுக்கு முன்பாக ஆட்டோவை நிறுத்திவிட்டு காத்திருந்தார். ஆட்டோ வருவதற்கு முன்பே கதிரவனை தயார்படுத்திவிட்டு வீட்டு வாசலில் காத்திருக்கும் விஜயா... அன்றைய தினம் காலையில் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.

சரி... வீட்டு கதவை தட்டி பார்த்துவிட்டு வரவில்லை என்றால் சென்றுவிடலாம் என்று நினைத்த ஆட்டோ டிரைவர், கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயாவின் உறவுக்கார பெண் அங்கு வந்தார். அவரும் வெளியில் நின்று கொண்டு சத்தம் போட்டு பார்த்தார். ஆனால் எந்தவொரு சத்தமும் வீட்டில் இருந்து வெளிவரவில்லை.

பிணமாக கிடந்தனர்

வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால், எப்படியும் விஜயாவும், கதிரவனும் உள்ளேதான் இருப்பார்கள் என்று முடிவு செய்த அந்த உறவுக்கார பெண் அக்கம் பக்கத்தினரை வரவழைத்து கதவை உடைத்தார். உள்ளே சென்று பார்த்தபோது... அதிர்ச்சி காத்திருந்தது. ரத்த வெள்ளத்தில் விஜயாவும், மகன் கதிரவனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அருகருகே பிணமாக கிடந்தனர்.

விஜயாவின் ஆடைகள் களைந்து கிடந்தன. ஜாக்கெட் கிழிக்கப்பட்டு இருந்தது. கதவு அடைக்கப்பட்டு இருந்தபோது எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. தகவல் சித்தோடு போலீசுக்கு பறந்தது. அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் மிஸ்ரா, துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டு கொலையாளியை தேடும் முயற்சி நடந்தது.

சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தங்களது புலன் விசாரணையை தொடங்கினர். முதலில் வீடு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது வீட்டின் புகைக்கூண்டு அருகில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டு கிடந்தன. எனவே குற்றவாளி அதன் வழியாகதான் தப்பி சென்றிருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்கவே சவால் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம்... விஜயாவின் ஆடைகள் களைந்து இருந்ததால், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பதாகவே போலீசாருக்கு தோன்றியது.

முக்கிய காரணம் என்ன?

கணவர் இல்லாததால், துணை இல்லாமல் வாழும் பெண்ணிடம் தவறாக நடக்க நினைத்த ஒருவரால் விஜயா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை தொடங்கியது. அப்படியென்றால்... விஜயாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் அல்லது அதே பகுதியை சேர்ந்த நபராகத்தான் கொலையாளி இருக்க வேண்டும் என்ற திசையில் விசாரணை நடத்திய போலீசார், சந்தேக வளையத்துக்குள் ஒருசிலரை கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் உண்மையான கொலையாளி சிக்கினார்.

யார் அவர்?... எதிர்பார்ப்பு எழுகிறது அல்லவா. அவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்தான் என்பது அடுத்த அதிர்ச்சி. பக்கத்து வீட்டுக்காரர் எதற்காக கொலை செய்துவிட்டு, ஓட்டை பிரித்து தப்பி ஓட வேண்டும்? அவருக்கும், விஜயாவுக்கும் என்ன முன்விரோதம் இருக்கும்? போன்ற கேள்விகள் அடுத்தத்தடுத்து எழுகிறதா? ஆம்... நாம் தொடக்கத்திலேயே பார்த்த அந்த ஒழுக்கம் தவறுதலே இந்த கொலையின் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

காதல் திருமணம்

பக்கத்து வீட்டை சேர்ந்த மாணிக்கம் (21) என்பவர்தான் இந்த குற்ற சம்பவத்தின் கொலையாளி. மாணிக்கத்தின் கடந்த கால வாழ்க்கையை சற்று பார்க்கலாம்... மதுரை பழங்காநத்தம் சொந்த ஊராகும். அங்கிருந்து பிழைப்பு தேடி ஈரோட்டுக்குள் அடியெடுத்து வைத்த அவர், ஈரோட்டில் உள்ள ஒரு மதுபான பாரில் வேலைக்கு சேர்ந்தார். கதாநாயகனாக சுற்றித்திரிந்த மாணிக்கம், தனது கடை உரிமையாளரின் மகளை காதல் வளைக்குள் சிக்க வைத்தார். திருமணமும் செய்துகொண்டு காலிங்கராயன்பாளையத்தில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார். அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தன. அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மாணிக்கம் தொழிலாளியாக வேலை செய்தார்.

பக்கத்து, பக்கத்து வீடு என்பதால் விஜயாவுடன், மாணிக்கத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டு பெண்ணுடன் தானே பேசி வருகிறார் என்று, அவர்களது பழக்கத்தை மாணிக்கத்தின் மனைவி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால்... அந்த பெருந்தன்மையை மதிக்கும் தன்மை மாணிக்கத்துக்கு இல்லை. ஏற்கனவே காதல் திருமணம் செய்து அன்பு மனைவியுடன், அழகான 2 மகன்களுடன் வாழ்வை நடத்தி வந்த மாணிக்கத்தின் மனது மீண்டும் அலைபாய தொடங்கியது. அவர் விரித்த வலை... விஜயாவை சிக்க வைத்தது.

இருவருக்கும் இடையேயான பழக்கம்... கள்ளக்காதலாக மாறியது. ஓட்டலுக்கு சென்று வந்த மாணிக்கம், நேராக வீட்டுக்கு செல்லாமல்... ரகசியமாக விஜயாவை சந்திக்க ஆரம்பித்தார். நாட்கள் செல்ல, செல்ல இவர்களது கள்ளத்தொடர்பும் தொடர்ந்து கொண்டே இருந்தது. விஜயாவின் செலவுக்கு மாணிக்கம் பணம் கொடுத்து வந்தார். தேவைப்படும் போதெல்லாமல் மாணிக்கத்திடம் உரிமையாக பணத்தை பெற்று கொண்டார், விஜயா.

பணத்தகராறு

சம்பவநாள் வந்தது... 18-2-2007 அன்று மாணிக்கத்தின் மனைவி குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருந்தார். அன்று இரவு சினிமா பார்க்க மாணிக்கம் சென்றார். மனைவி வீட்டில் இருந்தபோது ரகசியமாக கள்ளக்காதலியை சந்தித்து உல்லாசம் அனுபவித்த மாணிக்கத்துக்கு சொல்லவா வேண்டும்...

சினிமாவை பாதியிலேயே விட்டுவிட்டு நேராக விஜயாவின் வீட்டுகே சென்றார். அங்கு விஜயாவுடன் உல்லாசம் அனுபவித்தார். அப்போது ரூ.1,000 வேண்டுமென்று விஜயா கேட்டு உள்ளார். ஆனால் கையில் ரூ.100 தான் வைத்திருந்தார். இதனால் இருக்கும் பணத்தை கொடுத்தார். ஆனால் தனக்கு ரூ.1,000 தான் வேண்டுமென்று வற்புறுத்தினார், விஜயா.

சரி, கேட்கும் பணத்தை கொடுக்கலாம் என்று நினைத்த மாணிக்கம் தனது வீட்டுக்கு சென்றார். வீட்டில் மனைவி இல்லாததால் சுதந்திரமாக செயல்பட்ட அவர், வீட்டில் இருந்த ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு மீண்டும் விஜயாவின் வீட்டுக்கு சென்றார். மாணிக்கத்தை பார்த்ததும் விஜயாவுக்கு மகிழ்ச்சி. கேட்ட பணம் கிடைத்து விட்டதாக நினைத்தார். ஆனால் ரூ.500-ஐ கொடுத்ததும் மகிழ்ச்சியால் மலர்ந்த விஜயாவின் முகம் குறுகியது... எனக்கு ரூ.1,000 தான் தேவைப்படுகிறது, என்று ஒற்றைக்காலில் அவர் நின்றார். பணம் கேட்டு அடிக்கடி நச்சரித்து வந்ததால் ஏற்கனவே ஆத்திரத்துடன் மாணிக்கம் இருந்து வந்தார். பணம் கொடுக்கவில்லை என்றால், கையை பிடித்து இழுத்ததாக கூறி கூச்சல் போட்டு ஊரை கூட்டி அவமானப்படுத்துவேன் என்று விஜயா கூறியது மேற்கொண்டு கோபத்தை மாணிக்கத்துக்கு எழுப்பியது.

கொலை

சரி... இனியும் விட்டு வைத்தால் நம்மை அவமானப்படுத்தி விடுவாள் என்று நினைத்த மாணிக்கம்... ஏற்கனவே வீட்டில் இருந்து மறைத்து எடுத்து வந்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் விஜயாவை குத்தினார். இதை சற்றும் எதிர்பாராத விஜயா சத்தம் போட்டார். உடனடியாக அவரை கட்டிலில் தள்ளிவிட்டு ஒரு கையால் வாயை பொத்திக்கொண்டு, அவரது மேலே ஏறி உட்கார்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

உடனடியாக தப்பி செல்லலாம் என்று மாணிக்கம் நினைத்தபோது, விஜயாவின் மகன் கதிரவன் விழித்து கொண்டான். இவன் வெளியில் சென்று சொல்லி விடுவானோ என்ற அச்சம் மாணிக்கத்துக்கு தொற்றி கொண்டது. அப்படியென்றால் இவனையும் தீர்த்து கட்டியே தீர வேண்டும் என்று நினைத்த அடுத்த நிமிடம்... 5 வயது சிறுவன் என்றும் பாராமல், அவனது கழுத்தையும் அறுத்து கொன்று விஜயாவின் உடலுக்கு அருகிலேயே தள்ளி விட்டார்.

கதவை திறந்து வெளியே சென்றால், யாராவது பார்த்து விடுவார்களோ என்று நினைத்த மாணிக்கம் ஓடுகளை பிரித்து வெளியேறி தப்பினார். பின்னர் ரத்தம் படிந்த கத்தியை காலிங்கராயன் வாய்க்கால் அருகே உள்ள சுடுகாட்டு முட்புதரில் வீசிவிட்டு எதுவும் நடக்காததைபோல வீட்டுக்கு வந்து மாணிக்கம் படுத்து கொண்டார்.

இரட்டை ஆயுள் தண்டனை

மறுநாள் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியபோதும், எதுவுமே தெரியாததைபோல அங்கு வந்து மாணிக்கம் நின்றுள்ளார். அவரது நாடகம் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதைத்தொடர்ந்து மாணிக்கத்தை கைது செய்த போலீசார் அவர் மீது ஈரோடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை ஈரோடு விரைவு கோர்ட்டு அப்போதைய நீதிபதி ஜி.மஞ்சுளா விசாரித்து 6-3-2008 அன்று தீர்ப்பு கூறினார். அதில் அவர், விஜயா மற்றும் அவரது மகன் கதிரவனை கொலை செய்த குற்றத்துக்காக மாணிக்கத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

கள்ளக்காதல் காரணமாக விஜயா கொலை செய்யப்பட்டதுடன், ஒன்றுமே அறியாத 5 வயது சிறுவனும் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாணிக்கம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஏற்படும் தனிமை பலரை திருந்தி வாழ செய்திருக்கிறது. அதேபோல் மாணிக்கம் தான் செய்த குற்றத்தையும், காதல் மனைவிக்கு செய்த துரோகத்தையும், அன்பு மகனுக்கு செய்த ஏமாற்றத்தையும் உணர வைத்தது. இந்த குற்ற உணர்ச்சியே மெல்ல, மெல்ல உயிரை குடிக்க தொடங்கியது. ஒருநாள் அவரையே முழுமையாக விழுங்கி விட்டது. அதாவது, குற்ற உணர்ச்சியால் மனம் உடைந்து காணப்பட்ட மாணிக்கம்... தண்டனை பெற்ற சில மாதங்களிலேயே சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியான மாணிக்கம், நீதிபதி வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக தனக்குத்தானே மாற்றிக்கொண்டார்.

மாணிக்கமாக வாழ வேண்டிய அவர், அதன் அர்த்தம் புரியாமலேயே வாழ்ந்து மடிந்தார்.


நாடகமாடியவர் சிக்கியது எப்படி; விசாரணை அதிகாரிகள் தகவல்



இரட்டை கொலை வழக்கை அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குழுவில் இடம்பெற்ற தற்போதைய பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீரங்கன், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முத்து ஆகியோர் கூறியதாவது:-

கொலை நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினோம். அப்போது குற்றவாளியான மாணிக்கமும் எங்களுடன் விசாரணைக்கு உதவினார். கொலையாளிகள் ஓடுகளை பிரித்து சென்றிருக்கலாம் என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் 3, 4 பெயர்களையும் தெரிவித்தார். அவர் கூறிய நபர்களையும் சேர்த்து அந்த பகுதியை சேர்ந்த சுமார் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தினோம். அதில் ஒருவர், மாணிக்கம் அதிகாலையில் காலிங்கராயன் வாய்க்கால் ஓரமாக நடந்து சென்றதை பார்த்ததாக தெரிவித்தார். இதனால் மாணிக்கத்தை உடனடியாக எங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தோம். நாங்கள் கேட்கும் கேள்விக்கு அவர் முன்னுக்கு பின் முரணாகவே பதில் அளித்தார். இதனால் அவர் மீதான சந்தேகம் மேலும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் ஒரு வழியாக தான் செய்த குற்றத்தை மாணிக்கம் ஒப்புக்கொண்டார்.

அப்போது, கடந்த 6 மாதங்களாக விஜயாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் கொலை செய்யும் திட்டத்துடன் வீட்டில் இருந்தே வெங்காயம் வெட்டும் கத்தியை கொண்டு சென்று விஜயாவை கொன்றதாகவும், அவனது மகன் எழுந்துவிட்டதால் காட்டி கொடுத்துவிடுவான் என்று அவனையும் கொன்றதாகவும் மாணிக்கம் தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story