முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மரணம்
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக 1998-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரையிலும், அதன் பிறகு 2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் நரேஷ் குப்தா (வயது 73). உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1973-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். தேர்தல் அதிகாரி பணி ஓய்வுக்கு பிறகு மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இவர் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது, தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 2 தேர்தல்களையும் நரேஷ் குப்தா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக நடத்தினார். மேலும், தமிழகத்தில் 12 இடைத்தேர்தல்களையும் மிக திறமையாக நடத்திக்காட்டினார்.
உடல்நல குறைவால் மரணம்
அரசு பணி ஓய்வுக்கு பிறகு நரேஷ் குப்தா தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்துக்கு செல்லாமல் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நல குறைவு காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ பர்ஸ்ட் மேட் ஆஸ்பத்திரியில் கடந்த 5-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதி லும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் மரணம் அடைந்தார்.
நரேஷ் குப்தாவின் உடல் நாளை (புதன்கிழமை) அடக்கம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நரேஷ் குப்தா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'முன்னாள் தலைமை தேர்தல் அலுவலரும், காந்திய பற்றாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான நரேஷ் குப்தா மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறை செயலாளர், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலாளர் என பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள் கிறேன்' என கூறியுள்ளார்.