முன்னாள் தி.மு.க. பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் எரிப்பு
திருவண்ணாமலையில் முன்னாள் தி.மு.க. பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை எரித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை வேட்டவலம் சாலை குன்றக்குடி அடிகளார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவல்பூண்டி சுந்தரேசன், முன்னாள் தி.மு.க. பிரமுகர் ஆவார்.
இவருக்கு திருவண்ணாமலை அருகிலுள்ள அணைக்கரை பகுதியில் மற்றொரு வீடு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலை இவர் அணைக்கரை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
குன்றக்குடி அடிகளார் நகரில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. மாலை குன்றக்குடி அடிகளார் நகரில் உள்ள வீட்டின் எதிரே அவரது கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த காரின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுந்தரேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் எரிந்து கொண்டிருந்த காரின் நெருப்பை அணைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெள்ளை சட்டை மற்றும் பேண்ட் அணிந்த நபர் ஒருவர் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார், எதற்காக தீ வைத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.