வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முன்னாள் பெண் கவுன்சிலர் பலி
திசையன்விளை அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முன்னாள் பெண் கவுன்சிலர் உடல் கருகி பலியானார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் நாடார். இவரது மனைவி மகாராணி (வயது 65). இவர் இட்டமொழி கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலராக இருந்தார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் நந்தகோபால் நாடார், ஒரு மகன், மகள் மட்டும் உள்ளூரில் வசித்து வருகிறார்கள். மற்றவர்கள் வெளியூரில் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவில் மகாராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அங்கு மகாராணியின் வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜா தலைமையில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு இடிபாடுகளில் சிக்கி மகாராணி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் நாசமாகி கிடந்தன. மகாராணி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த மகாராணி, காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்தார். ஆனால், கியாஸ் சிலிண்டரில் கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறியாமல் மகாராணி அடுப்பை பற்ற வைத்ததால் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாராணி உடல் கருகி பலியானது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திசையன்விளை அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து முன்னாள் பெண் கவுன்சிலர் பலியானது சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.