"பிரதமர் மோடி கூறியது உண்மைதான்"
தமிழகத்தில் கோவில் சொத்துகள் அபரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியது உண்மைதான் என்று திருப்பூரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
திருப்பூர்
தமிழகத்தில் கோவில் சொத்துகள் அபரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியது உண்மைதான் என்று திருப்பூரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
சுக்ரீஸ்வரர் கோவில்
அகில பாரத சிவனடியார் திருக்கூட்டம் எனும் அமைப்பிற்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலை ஆய்வு செய்வதற்காகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று வந்தார். பின்னர் அவர் சுக்ரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சியாளர்களால் கோவில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது. கோவில் இடங்களை விட்டுவிட்டு கட்சிகளுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும். அல்லது நத்தம் புறம்போக்கில் கலெக்டர் அலுவலகம் கட்ட வேண்டியதுதானே. 1,128 வருட பழமையான கோவில்கள் சீரமைக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு கோவில் இடங்கள் சூறையாடப்படுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? இல்லை அ.தி.மு.க. மாடல் ஆட்சியா?
பிரதமர் மோடி கருத்து
ஆவணங்களின் அடிப்படையில் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் இருக்கிறது. அதில் 5 ஆயிரம் ஏக்கர் மட்டுமே இதுவரை அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசும் கண்டும் காணாமல் இருந்தது. தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக பிரதமர் மோடி ஒரு கருத்தை தெளிவுபடுத்தி உள்ளார். அது உண்மை தான். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பாரானால் தன்னுடன் விவாதத்திற்கு தயாரா?
நான் பணியில் நேர்மையாக இருந்தேன். இனி கோவில்களின் மீது கவனம் செலுத்துவேன். இனியும் பேசாமல் இருந்தால் இல்லாமலே செய்து விடுவார்கள். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படுவது இல்லை. பிரதமர் மோடி கூறுவது பொய் என்றால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு தகுந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.