தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் மாணவர்கள் சாதிக்க முடியும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்


தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் சாதிக்க முடியும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கல்லூரி கனவு வழிகாட்டும் நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

தூத்துக்குடி

தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் சாதிக்க முடியும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

கல்லூரி கனவு

தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்னும் பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்று பேசினார். கனிமொழி எம்.பி. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தன்னம்பிக்கை

ஒவ்வொரு மாணவர்கள் வாழ்க்கையிலும் பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை வாய்ப்பு, வழிநடத்தும் பருவம் ஆகிய 3 பருவங்கள் உள்ளன. இதில் 3-வது பருவம் முக்கியமானது ஆகும். இந்த 3-வது பருவத்தை அடைய 2-வது பருவத்தை எப்படி எதிர்கொள்கிறீர்களோ அதனை பொறுத்தே அமையும். அதே நேரத்தில் ஒரு நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இதனை மனதில் கொண்டுதான் தமிழக முதல்-அமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி கல்லூரி கனவு திட்டத்தை தொடங்கி உள்ளார். மாணவர்களின் வெற்றிக்கு பின்புலம் ஒரு காரணம் கிடையாது. நாம் எதிர்பார்க்கும் படிப்பு கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்ததை நல்லபடியாக விரும்பி படிக்க வேண்டும். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால்தான் சாதிக்க முடியும். தளராத கடின முயற்சி, விடா முயற்சி இருந்தால் சாதிக்க முடியும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் தங்கள் எண்ணத்தை திணிக்க கூடாது.

மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டு விட வேண்டும், நீங்கள் யாரையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். உயர்கல்வி முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் வேலை தேடுபவராக இருக்க கூடாது. வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என்று பிரதமர், முதல்-அமைச்சர் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் சுயமாக தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும். இங்கு உள்ள 1400 பேரும் 5 ஆண்டுக்கு பிறகு 1400 தொழிற்சாலைகள் தொடங்கி அதனை திறக்க என்னை அழைக்க வேண்டும் என்று கூறினார்.

கனிமொழி எம்.பி

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசும் போது, கல்லூரி கனவு என்பது மாணவர்களாகிய உங்கள் கனவாக மட்டும் இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களுக்கு பல நியாயமான கனவுகள் இருக்கும். ஆனால் நீங்கள் யாராக வேண்டும் என்பது உங்கள் கனவாக இருக்க வேண்டும். மற்றவரின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு உள்ளது. உயர்கல்வியில் பல வாய்ப்புள் உள்ளன. விவசாயத்துறையில் நானோ யூரியா உரம் தயாரிக்கப்படுகிறது. அதனை தெளிக்க டிரோன்கள் தேவைப்படுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் அறிந்தவர்கள் விவசாயிகளுக்கு தேவைப்படுகின்றனர். உலகம் விரிந்து கொண்டே இருக்கிறது. அனைவருக்கம் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் உள்ளன. அதற்கு சில தேடுதல் தேவை. பெண்கள் மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு படித்து உள்ளீர்கள். படிப்பது உங்கள் உரிமை. அந்த உரிமையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். படித்துவிட்டு வீட்டில் இருந்து விடாதீர்கள். தடைகளை உடைத்துக் கொண்டு சாதிக்க கூடியவர்களாக வர வேண்டும். இந்த சமூகத்தின் தலைவர்களாக உங்களை உருவாக்கி கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

அமைச்சர் கீதாஜீவன்

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, நமது மாவட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புக்கான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அந்த மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும். அல்லது இலக்கில் தொய்வு ஏற்பட்டாலும் சோர்ந்து விடக்கூடாது. தோல்வியை வெற்றியின் படிக்கட்டாக மாற்ற தெரிந்து இருக்க வேண்டும். என்னால் முடியும் என்று நினைத்தால்தான் சாதிக்க முடியும். உங்களுக்கு எந்த துறையில் சாதிக்க முடியுமோ அந்த துறையை தேர்வு செய்யுங்கள். அப்போது எல்லோரும் சாதனையாளர்கள்தான். முடியாது என்ற எண்ணத்தையும் வைக்காதீர்கள். முடியாது என்று சொல்பவர்களையும் பக்கத்தில் வைக்காதீர்கள், என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு நன்றி கூறினார்.

முன்னதாக ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற சுப்புராஜ் என்பவரை கனிமொழி எம்.பி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பாராட்டினர்.


Next Story