முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை: ''பழிவாங்கும் அரசாக தி.மு.க. செயல்படவில்லை''-அமைச்சர் ரகுபதி பேட்டி


முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை: பழிவாங்கும் அரசாக தி.மு.க. செயல்படவில்லை-அமைச்சர் ரகுபதி பேட்டி
x

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றதில் ‘‘பழிவாங்கும் அரசாக தி.மு.க. செயல்படவில்லை’’ என அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது தொடர்பாக புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:- "எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும் போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படவில்லை.

முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் பலர் புகார்களை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து அதில் உண்மை தன்மை தெரிந்த பிறகுதான் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 முன்னாள் அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வுக்கு பிறகு நீதிமன்றத்தில் அவைகள் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சோதனைகள் நடைபெற்று வந்தன. அதை தி.மு.க. அமைச்சர்கள் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. மீதமுள்ள 5 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்''. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story