முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மரணம்


முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மரணம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கோயம்புத்தூர்


கோவையில் உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கோவை தங்கம் மரணம்

கோவை சாய்பாபா காலனி அருகே கே.கே.புதூர் கிருஷ்ணா நகரில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மரணம் அடைந்த கோவை தங்கத்தின் உடல் கிருஷ்ணாநகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

அவருடைய உடலுக்கு நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மேயர் கல்பனா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜன், பைந்தமிழ் பாரி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் கோவை தங்கத்தின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சொக்கம்புதூர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோவை தங்கம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

வாழ்க்கை குறிப்பு

கோவை தங்கத்துக்கு வயது 74. இவர் கடந்த 1968 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர், மாநில காங்கிரஸ் துணை தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளராகவும் பணியாற்றி வந்தார். 1996-ம் ஆண்டில் மூப்பனார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது அதில் கோவை மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இவருக்கு தில்லை நாயகி என்ற மனைவியும், விஷ்ணு என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது.


Next Story