முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கில் 16-ந்தேதி தீர்ப்பு


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கில் 16-ந்தேதி தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கில் வருகிற 16-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று விழுப்புரம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

விழுப்புரம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வாதங்கள் நிறைவு

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. தொடர்ந்து இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வக்கீல்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை.

அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்களில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.

அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

16-ந் தேதி தீர்ப்பு

இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்னும் 4 நாட்களில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story