சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 45 பேர் காயம்

குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 45 பேர் காயமடைந்தனர்.
கீரனூர்:
ஜல்லிக்கட்டு
கீரனூர் அருகே குளத்தூர் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. பாக்குடி செல்லும் வழியில் உள்ள திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டை அமைச்சர் ரகுபதி, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து ெதாடங்கி வைத்தனர். பின்னர் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
அதைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பாய்ந்து சென்றது. இதில் புதுக்கோட்டை, கீரனூர், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 889 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
45 பேர் காயம்
காளைகள் முட்டியதில் திருப்பூரை சேர்ந்த பாஸ்கர் (வயது 26), கீரனூரை சேர்ந்த சத்யராஜ் (23), மாத்தூரை சேர்ந்த கார்த்தி (18), ராப்பூசலை சேர்ந்த முனியாண்டி (47) உள்ளிட்ட வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 45 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில், சைக்கிள், கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி மற்றும் கீரனூர், குளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.