ரூ.24¼ கோடியில் புதிய நெல் சேமிப்பு கிடங்கு
ரூ.24¼ கோடியில் புதிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 45 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் தற்காலிக கூடாரங்களில் வைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் நனைந்து வீணாகாமல் இருக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி அங்கு புதிதாக ரூ.24 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 1,000 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. புதிய நெல் சேமிப்பு கிடங்கு கட்ட அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சியில் சீர்காழி நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி, நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகுமார், மாவட்ட செயற்பொறியாளர் குணசீலன், கண்காணிப்பாளர் தமிழழகன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.