பெரம்பலூரில் நரிக்குறவர்கள் நூதன போராட்டம்


பெரம்பலூரில் நரிக்குறவர்கள் நூதன போராட்டம்
x

விவசாய நிலங்களுக்கு பட்டா கேட்டு பெரம்பலூரில் நரிக்குறவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

நூதன போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் நூதன போராட்டமாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே ஒன்று கூடி நின்றனர்.

பின்னர் அவர்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், நரிக்குறவர்களில் ஆண்கள் அரை நிர்வாணத்துடன் இது தொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை சந்தித்து மனு கொடுப்பதற்காக தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம்

இதையடுத்து, அவர்கள் ராசா எம்.பி.யை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். அவர் இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கையினை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டரை சந்திக்க ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் வந்து இது தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story