கலெக்டர் படத்துடன் குறுந்தகவல் அனுப்பி வேளாண் அதிகாரியிடம் ரூ.3 லட்சம் மோசடி
சிவகங்கை கலெக்டரின் புகைப்படத்துடன் குறுந்தகவல் அனுப்பி வேளாண்மை அதிகாரியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை கலெக்டரின் புகைப்படத்துடன் குறுந்தகவல் அனுப்பி வேளாண்மை அதிகாரியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் படத்துடன்...
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) பணிபுரிபவர் ஷர்மிளா (வயது55). கடந்த 26-ந் தேதி இவருடைய செல்போனுக்கு குறுந்தகவல் சிவகங்கை மாவட்ட கலெக்டரின் படத்துடன் வந்துள்ளது. அதில் பரிசு கூப்பன் என்ற பெயரில் லிங்க் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. ஷர்மிளா அந்த லிங்கை பார்த்தபோது அதில் அவருடைய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.
உடனே அவர் அதை பூர்த்தி செய்து அனுப்பினார். இதை தொடர்ந்து அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ. 10,000 எடுக்கப்பட்டதாம். அவர் இதே போல 30 தடவை அந்த லிங்கை திறந்துள்ளார். இதன் மூலம் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ. 3 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டதாம்.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விமலா இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கலெக்டரின் படத்துடன் லிங்க் அனுப்பியவரின் செல்போன் பீகார் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த செல்போனை பயன்படுத்துபவரின் விலாசம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார், இந்த மோசடி செய்தவரின் வங்கிக்கணக்கை முடக்கவும் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.