நலவாரியத்தில் கடன் உதவி பெற்று தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு
நலவாரியத்தில் கடன் உதவி பெற்று தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோாி மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனா்.
கல்வராயன்மலை பகுதி புளுவபாடியை சேர்ந்த கோவிந்தராஜ், கண்ணூரை சேர்ந்த திலகவதி, கரியாலூர் கிராமம் ராமன் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், சின்னசேலம் தாலுகா மண்மலை கிராமத்தை சேர்ந்த பூக்காரர் ராமசாமி மகன் பாலமுருகன் (வயது 40) என்பவர் தான் சிட்பண்ட் அதிபதி என்றும் ஒரு அறகட்டளையின் பெயரை குறிப்பிட்டு கச்சிராயப்பாளையத்தில் அலுவலகம் உள்ளது என்றார்.
மேலும், எனக்கு அரசு அதிகாரிகள் நெருக்கமாக உள்ளார்கள் எனக்கூறி அரசு திட்டங்களான அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் அட்டைகள் மற்றும் சலுகைகள் மற்றும் தாட்கோ மானியம் ஆகியவற்றை பெற்று தருவதாக கூறினார். இதைநம்பி அமைப்புசாரா நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நபர் ஒன்றிற்கு ரூ.840 வீதம் 200 நபர்களிடம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பெற்றுக்கொண்டார்.
அதேபோல் தாட்கோ நிதியுதவி பெற்றுத்தருவதாக கூறி 50 பேரிடம் ரூ.27,500 ஆயிரம் ரூ.40,ஆயிரம், ரூ.1,லட்சம் வீதம் ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 500 என்று மொத்தம் 11 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கிக்கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுபோன்று பணம் பெற்றுள்ளார்.
ஆனால் அவர் அரசின் எந்த உதவியையும் பெற்று தரவில்லை. இதன் பின்னர் தான் நாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திரும்ப கேட்ட போது அவர் தாராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார்.
எனவே மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுடைய பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.