டாக்டரின் வங்கி கணக்கில் ரூ.4¾ லட்சம் மோசடி


டாக்டரின் வங்கி கணக்கில் ரூ.4¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலி குறுந்தகவல் மூலம் தர்மபுரியை சேர்ந்த டாக்டரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி நடந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

போலி குறுந்தகவல் மூலம் தர்மபுரியை சேர்ந்த டாக்டரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி நடந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டர்

தர்மபுரியை சேர்ந்தவர் கணேசன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டாக்டரான இவர் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவருடைய செல்போனுக்கு கே.ஒய்.சி. அப்டேட் செய்ய வேண்டும் என்று ஒரு குறுந்தகவல் வந்தது. இல்லாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பிய டாக்டர் உடனடியாக அந்த குறுந்தகவலில் இருந்த லிங்க்கை கிளிக் செய்தார்.

பின்னர் அதில் தனது வங்கி கணக்கு விவரம் மற்றும் ஓ.டி.பி. எண் ஆகிய விவரங்களை பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 829 மாயமானது. அவர் செல்போனில் பதிவு செய்த விவரங்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பணத்தை மீட்டு ஒப்படைப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் இதுகுறித்து உடனடியாக தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த பணத்தை மீட்க தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீட்கப்பட்ட பணத்தை டாக்டரிடம் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஒப்படைத்தார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

செல்போனில் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை கேட்டு ஏதேனும் குறுந்தகவல் வந்தால் அதை நம்பி விவரங்களை அனுப்பக்கூடாது. கே.ஒய்.சி., பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை அப்டேட் செய்வதாக கூறி வரும் லிங்க்குகளை கிளிக் செய்யக்கூடாது. இதேபோல் பரிசுத்தொகை வந்ததாகவும், கடன் வழங்குவதாகவும் கூறி வரும் குறுந்தகவல்களை நம்பக்கூடாது. எனி டெஸ்க், டீம் வியூவர் போன்ற செயலிகளை யாராவது இன்ஸ்டால் செய்ய சொன்னால் செய்யக்கூடாது.

போலியான குறுந்தகவல் மூலம் விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுபவர்கள், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. இத்தகைய சந்தேகத்துக்கிடமான குறுந்தகவல்கள் வந்தால் அது குறித்து உடனடியாக 1,030 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும். சைபர் கிரைம் இணையதளத்திலும் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story