குறைந்த விலைக்கு சிமெண்டு தருவதாக கூறிவியாபாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி
குறைந்த விலைக்கு சிமெண்டு தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.7 லட்சத்து 52 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாபாரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் சென்னபசப்பா (வயது 36). இவர் ஓசூரில் வீடு கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய கூடிய ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 1-ந் தேதி இவரது செல்போன் எண்ணிற்கு ஒருவர் தொடர்பு கொண்டுபேசினார். இதில் தான் சிமெண்டு வியாபாரம் செய்து வருவதாகவும், மொத்தமாக சிமெண்டு வாங்கினால் குறைந்த விலைக்கு தருவதாகவும் சென்னபசப்பாவிடம் அவர் கூறினார்.
ரூ.7.52 லட்சம் அனுப்பினார்
இதை நம்பி சென்னபசப்பா அவர் கூறியபடி தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு ஒன்றிற்கு ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 500-ஐ அனுப்பினார். அதன்பிறகு அந்த நபர் சென்னபசப்பாவுடன் பேசுவதை தவிர்த்தார்.
இந்த நிலையில் சிமெண்ட் மூட்டைகள் வராததால் சந்தேகம் அடைந்த சென்ன பசப்பா சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சென்னபசப்பா இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.