சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 3 பேரிடம் ரூ.38.30 லட்சம் மோசடி
பகுதி நேர வேலைக்கு அதிக கமிஷன் தருவதாக கூறி சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 3 பேரிடம் ரூ.38 லட்சத்து 30 ஆயிரத்து 254 மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரானைட் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தோட்டகிரியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கெலமங்கலத்தில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி இவரது வாட்ஸ்-அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக கமிஷன் தொகை பெறலாம் என்றும், அதற்காக குறிப்பிட்ட ஒரு டெலிகிராம் அக்கவுண்டில் தொடர்பு கொள்ளவும் கூறப்பட்டிருந்தது.
அதில் தொடர்பு கொண்ட சுரேஷ், அவர்கள் கூறிய தகவல்படி பல்வேறு தவணைகளில் ரூ.7 லட்சத்து 73 ஆயிரம் தொகையை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.
இதன் பிறகு சுரேசுக்கு வாட்ஸ்-அப்பில் எந்த தகவல்களும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் கங்கா ஈஸ்வரி (36). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 30-ந் தேதி இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர்கள் கூறிய தகவல்படி அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் தொகையை அனுப்பி வைத்தார். பின்னர் கங்கா ஈஸ்வரி எண்ணிற்கு எந்த தகவல்களும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சம்பந்தபட்டவர்களை தொடர்பு கொண்டபோது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கங்கா ஈஸ்வரி இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவலீலா (30). இவர் சூளகிரி மில்லத் நகர் பகுதியில் தங்கி உள்ளார். மேலும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை பார்த்தால் அதிக கமிஷன் பெறலாம். இதற்காக ஓட்டல்களுக்காக மதிப்புரை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதை நம்பி சிவலீலா அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு நடைமுறை செலவுகளுக்காக ரூ.24 லட்சத்து 72 ஆயிரத்து 254-ஐ அனுப்பினார். தொகை கிடைத்த பின்னர் சிவலீலாவின் எண்ணிற்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனக்கு குறுந்தகவல்கள் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவலீலா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த 3 புகார்கள் குறித்தும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.