லண்டனில் இருந்து பேசுவதாக கூறி வியாபாரியிடம் ரூ.22 லட்சம் மோசடி வங்கி கணக்கை முடக்கிய போலீசார்
லண்டனில் இருந்து பேசுவதாக கூறி வியாபாரியிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்யப்பட்டது. மோசடி ஆசாமியின் வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.
லண்டனில் இருந்து பேசுவதாக கூறி வியாபாரியிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்யப்பட்டது. மோசடி ஆசாமியின் வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.
பரிசு விழுந்திருப்பதாக
சிவகங்கை வாசுகி தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 36). வளையல் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய முகநூலில் ஒருவர் அறிமுகமாகி தான் லண்டனில் வசிப்பதாகவும், தங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்திருப்பதாகவும் அதை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜெயபிரகாசை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் தான் மும்பை துறைமுகத்தில் இருந்து பேசுவதாகவும் தங்கள் பெயருக்கு பரிசு பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணம் கொண்ட பார்சல் வந்துள்ளதாகவும் அதற்கு சுங்கவரி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரூ.22 லட்சம் மோசடி
இதை நம்பிய ஜெயபிரகாஷ் பல தவணைகளில் ரூ.22 லட்சத்து 30 ஆயிரத்து 698-ஐ வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜெயபிரகாஷ், அவர்களை தொடர்பு கொண்ட நிலையில் சரியான தகவல் ஏதுவும் தெரிவிக்கவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயப்பிரகாஷ் இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜுடம் புகார் கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அதன்பேரில் ஜெயப்பிரகாஷிடம் லண்டனில் இருந்து பேசியதாக கூறியவர் டெல்லியில் இருந்து ஏமாற்றி பேசியது தெரிய வந்துள்ளது.
வங்கி கணக்கு முடக்கம்
மேலும் அவர் அனுப்பிய பணம் டெல்லி, மேகாலயா, அசாம், நாகலாந்து, மராட்டியம் உள்பட 8 இடங்களில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் 7 வங்கிகளின் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.