வீட்டுமனை தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடிபாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
வீட்டுமனை தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனா்.
கண்டாச்சிபுரம் தாலுகா ஆ.கூடலூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர், எங்களிடம் வந்து திருக்கோவிலூரை அடுத்த பாபா கோவில் பின்புறம் வீட்டுமனை வாங்கித்தருவதாக கூறினார்கள். இதை நம்பிய நாங்கள் சுமார் 100 பேர், அவர்கள் 2 பேரிடமும் மாதந்தோறும் ரூ.750 வீதம் கடந்த 5 ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்தோம். இந்த சூழலில் அவர்கள் இருவரும் எங்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுமனையை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். நாங்கள் பலமுறை அவர்களிடம் சென்று வற்புறுத்தி கேட்டபோதிலும் வீட்டுமனையும் தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டனர். இவ்வாறாக மொத்தம் ரூ.50 லட்சம் வரை அவர்கள் இருவரும் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் இருவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.