பெண்ணின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி:கணவர், மாமனார்-மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்கு


பெண்ணின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி:கணவர், மாமனார்-மாமியார்  உள்பட 6 பேர் மீது வழக்கு
x

பெண்ணின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தது தொடா்பாக கணவர், மாமனார்-மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

ஈரோடு

பெண்ணின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக கணவர், மாமனார், மாமியார் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரூ.1 கோடி

பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மகள் யுத்தி (வயது 27). இவர் கடந்த 5-ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

ஈரோடு முத்துகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், எனக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 200 பவுன் நகை, வைர நகைகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் போன்றவற்றை எனது பெற்றோர் வழங்கினர். எனது கணவர் சந்தோஷ் என்னிடம் புதிதாக தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் என்னையும், அவரது அண்ணன் மனைவியையும் இயக்குனர்களாக நியமிப்பதாகவும் கூறினார். அதற்கு ரூ.1 கோடி பங்கு தொகை என்னிடம் கேட்டார். நான் எனது தந்தையிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று அவரிடம் கொடுத்தேன். என்னை இயக்குனராக நியமித்து 5 ஆயிரம் பங்குகள் ஒதுக்கீடு செய்து கொடுத்தனர்.

இந்தநிலையில் என்னை மனதளவில் சித்ரவதை செய்ததால் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி என் பெற்றோர் வீட்டுக்கு வந்தேன். 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்தது.

போலி ஆவணங்கள்

கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி ஈரோடு கிருஷ்ணசெட்டி வீதியில் நான் நின்றிருந்தேன். அப்போது அங்கு வந்த எனது கணவரும், அவரது அண்ணனும் எனக்கு விவாகரத்து கொடுக்கும்படி மிரட்டினர். மேலும், எனது கணவர் ஏற்கனவே விரும்பிய பெண்ணை 2-வது திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டதாக தெரிவித்தனர். எனது பெயரில் உள்ள நிறுவனத்தின் பங்குகளை விற்று, இயக்குனர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக அவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் இதுதொடர்பாக விசாரித்தபோது, நான் வகித்து வந்த இயக்குனர் பதவியை ராஜினாமா செய்ததுபோல போலி ஆவணம் தயாரித்தது தெரியவந்தது. மேலும், 4 ஆயிரத்து 500 பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்து உள்ளனர். எனவே மோசடி செய்த கணவர் சந்தோஷ், அவரது அண்ணன் சங்கீத், தாய் தமிழ்செல்வி, தந்தை சுரேஷ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

6 பேர் மீது வழக்கு

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து யுத்தியின் கணவர் சந்தோஷ், மாமனார் சுரேஷ், மாமியார் தமிழ்செல்வி உள்பட 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story