பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வழங்கி மோசடி

110 கி.மீ. தூரம் வரை செல்லும் என்று கூறி பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வழங்கி மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது இயற்கை மருத்துவ ஆலோசகர் புகார் கூறினா்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே மழையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47), இயற்கை மருத்துவ ஆலோசகரான இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் குழந்தைகளுக்கான தின்பண்டங்களை வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள ஒரு தனியார் வாகன ஷோரூமில் ரூ.1 லட்சம் கொடுத்து 3 சக்கர வாகனம் ஒன்றை வாங்கினேன். அந்த வாகனத்தில் ஒருமுறை பேட்டரி சார்ஜ் போட்டால் 110 கி.மீ. தூரம் வரை செல்லும் என்றார்கள். ஆனால் அந்த வாகனம் 40 கி.மீ. தொலைவு கூட செல்வதில்லை. இதுபற்றி அந்நிறுவனத்தில் சென்று முறையிட்டதற்கு அங்கிருந்த ஊழியர்கள், வாகனத்திற்குரிய பணம் தர முடியாது என்று கூறி என்னை மிரட்டினர். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே நான் கொடுத்த பணம் ரூ.1 லட்சம் மற்றும் எனக்கு நஷ்ட ஈட்டையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு என்னை ஏமாற்றிய அந்நிறுவனத்தின் மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினர்.






