கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி: நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நிதி நிறுவனத்தில் மோசடி
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் மதன்குமார் என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்தார். 2 பேரும் தங்களது யூசர் ஐ.டி. சாப்ட்வேரை பயன்படுத்தி மோசடி செய்ததாக தெரிகிறது.
அதாவது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய 85 பேரிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்காமல் பணம் வந்ததாக சாப்ட்வேரில் வரவு வைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்து 587 மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
2 பேர் மீது வழக்கு
விசாரணையில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்காமலும், முறையாக வசூல் செய்து கொடுக்காத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தங்களது பதவி உயர்வு, ஊக்கத்தொகைக்காக பணம் வசூல் செய்தது போன்று போலியாக தோற்றத்தை உருவாக்கி பணம் கட்டியதாக வரவு வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் நிதி நிறுவன கோட்ட மேலாளர் பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததாக மகேந்திரன், மதன்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.