கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது


கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
x

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், ஏ.டி.எம்.கார்டு

பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்த கேரளா வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்

பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்த கேரளா வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் வேலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். சம்பவத்தன்று இவருடைய சமூக வலைத்தளத்திற்கு (இன்ஸ்டாகிராம்) பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. முதலில் நண்பர்போல் பேசிய அந்த நபர், பட்டதாரி வாலிபர் குறித்த தகவல்களை பெற்று கொண்டார்.

அப்போது கும்பகோணம் வாலிபர், தான் வேலை தேடி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய அந்த நபர், தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்துத்தான் வேலையில் சேர்ந்ததாகவும், உங்களுக்கும் வேலை வேண்டும் என்றால் பணம் கொடுத்தால் வாங்கி விடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

போலி பணி ஒப்புதல் கடிதம்

இதனை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர், தன்னிடம் மறுமுனையில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் அனுப்பி வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து கும்பகோணம் வாலிபருக்கு விமான நிலையத்தில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பேசியவர், கும்பகோணம் வாலிபரின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளார்.

இதனை பதிவிறக்கம் செய்து கொண்ட கும்பகோணம் வாலிபர், அந்த கடிதத்தோடு பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அந்த கடிதத்தை கும்பகோணம் வாலிபர் கொடுத்துள்ளார். அப்போதுதான் அது போலியானது என்றும், தன்னிடம் பணம் மோசடி செய்யப்பட்டதும் அவருக்கு தெரிய வந்தது.

கேரள மாநிலம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கும்பகோணம் வாலிபர், தஞ்சை மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கும்பகோணம் வாலிபரிடம் மோசடி செய்தவர் கேரளா மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாலமுருகன் (வயது 28) என்பதும், கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது.

வாலிபர் கைது

சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பரண்டு சுவாமிநாதன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோனியம்மாள், கார்த்திக் மற்றும் போலீசார் கொடைக்கானல் சென்று, அங்கு வீட்டில் இருந்த பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து மோசடிக்காக பயன்படுத்திய செல்போன், ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரூ.35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story