வேலை வாங்கி தருவதாக போடி பெண்ணை ஏமாற்றிய மோசடி கும்பல் தலைவன் டெல்லி கலவரத்தில் தொடர்புடையவன்; திடுக்கிடும் தகவல்கள்
போடி பெண்ணிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கும்பலின் தலைவனுக்கு டெல்லி துப்பாக்கிச்சூடு, கலவரத்தில் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போடி பெண்ணிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கும்பலின் தலைவனுக்கு டெல்லி துப்பாக்கிச்சூடு, கலவரத்தில் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்ணிடம் மோசடி
தேனி மாவட்டம், போடி அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் விமான நிலையத்தில் வேலை வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும் என்று ஒரு செல்போன் எண் இருந்தது. அந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டார். அதில், தனது மகனுக்கு வேலை தேடிக்கொண்டு இருப்பதை அவர் தெரிவித்தார்.
உடனே எதிரே பேசிய நபர்கள் விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறினர். அதற்கு அவர்கள் பணம் கேட்டனர். பல தவணையாக அந்த பெண் ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்தை அந்த நபர்கள் கொடுத்த வங்கிக்கணக்குகளில் செலுத்தினார். பணத்தை பெற்றுக்கொண்ட நபர்கள் வேலை வாங்கிக்கொடுக்கவில்லை. மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது.
இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் கடந்த ஆண்டு மே மாதம் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
5 பேர் கைது
அந்த தனிப்படையினர் நடத்திய புலன் விசாரணையில், மோசடி செய்த நபர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வன், போலீசார் ஜெபராஜ், ஜெகதீஸ்குமார், மாதவன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் டெல்லி விரைந்தனர்.
டெல்லி தாபரி பகுதியில் கால்சென்டர் அமைத்து ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 9-ந்தேதி அங்கு தனிப்படையினர் சென்றபோது, அங்கிருந்த ராஜா (வயது 27), அப்துல்சமது (27), மணி மகன் கார்த்திக் (36), பாலகிருஷ்ணன் மகன் ரவிகிருஷ்ணன் (39), செல்லப்பன் மகன் ரவி (37) ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையில், அந்த கால்சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் மாதேஷ் என்பதும், அவர் தலைமறைவாகி விட்டதும் தெரியவந்தது.
செல்போன்கள் பறிமுதல்
கைதானவர்களில் ராஜா, அப்துல்சமது இருவரும் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். கார்த்திக், ரவிகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பள்ளிபாளையம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களின் பெற்றோர் டெல்லி சக்குர்பூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைதான 5 பேரையும், தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் நேற்று கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டு போன்ற ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். கைதானவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். சுமார் 10 ஆண்டுகளாக இந்த கும்பலை சேர்ந்தவர்கள் இதுபோன்று பல்வேறு வடிவங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளனர்.
கலவரத்தில் தொடர்பு
ஆனால், கும்பலின் தலைவனாக கருதப்படும் மாதேஷ் சிக்கினால் தான் எவ்வளவு மோசடி நடந்துள்ளது? மோசடி பணத்தை என்ன செய்தார்கள்? என்று தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தலைமறைவாக உள்ள மாதேஷ் குறித்து விசாரித்த போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த கலவரம், துப்பாக்கிச்சூடு போன்ற சம்வங்களில் மாதேஷ் முக்கிய குற்றவாளி என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.