வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி
வள்ளியூர் அருகே வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்த மந்திரவாதி உள்பட 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 44). இவர் சென்னையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கண்ணனின் உடன் பிறந்த தம்பி அசோக்குமார். இவரது காலில் வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் கவிதாவை சந்தித்து பேசினார். அப்போது, பணகுடியில் அய்யப்பன் என்ற மந்திரவாதி இருப்பதாகவும், அவரிடம் அசோக்குமாரை அழைத்து சென்று பார்த்தால் சரியாகும் என்றும் கவிதாவிடம் கூறினார். இதையடுத்து அய்யப்பனை வீட்டிற்கு வரவழைத்து அசோக்குமாருக்கு சிகிச்சை அளித்தனர்.
இதன் காரணமாக அய்யப்பன் அடிக்கடி அங்கு வந்து சென்றார். அப்போது, கவிதாவிடம் உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை எடுப்பதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா, அய்யப்பன் அவரது மனைவி நல்லம்மாள், மகன்கள் பிரபு, பிரதீப் ஆகியோரிடம் ரூ.2½ லட்சம், 2 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் அய்யப்பன் புதையலை எடுத்துக் கொடுக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த கவிதா தனது பணம், நகையை திருப்பிதரும்படி அய்யப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவிதா வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் அய்யப்பன், நல்லம்மாள், பிரபு, பிரதீப் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.