நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்பட இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.1¾ கோடி மோசடி
நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்பட இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.1¾ கோடி மோசடியில் ஈடுபட்ட துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.
திரைப்பட இயக்குனர்
பிரபல திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ். இவர், பசங்க, வம்சம், மெரினா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஆகும். தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பாண்டிராஜ், அவ்வப்போது புதுக்கோட்டைக்கு வந்து செல்வது உண்டு. இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜிடம் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் (வயது 40) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார்.
இதையடுத்து, பாண்டிராஜ் தனது படங்களில் துணை நடிகர் வேடத்தில் குமாரை நடிக்க வைத்திருக்கிறார். குமார் புதுக்கோட்டையில் இருந்தபடி நில புரோக்கராகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ரூ.1¾ கோடி மோசடி
இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜிடம் சிப்காட் மற்றும் புதுக்கோட்டையில் டி.வி.எஸ். கார்னர் அருகே நிலம் இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாக கூறி அதற்காக பல லட்சம் பணம் பெற்றுள்ளார். இதுதவிர கடனாகவும், சொந்த செலவிற்காகவும் இயக்குனர் பாண்டிராஜிடம் பணம் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் சிப்காட் அருகே அவர் கூறிய நிலத்தை பத்திரம் பதிவு செய்த நிலையில், அந்த இடம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு இருப்பது தெரியவந்தது.
இதேபோல் டி.வி.எஸ்.கார்னர் அருகே உள்ள நிலமும் வேறொரு நபருக்குரியது என தெரிந்தது. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் அதிர்ச்சியடைந்தார். நிலம் வாங்கி தருவதாக மற்றும் கடனாக, சொந்த செலவிற்காகவும் என மொத்தம் ரூ.1 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் தன்னிடம் மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது. பணத்தை திருப்பி கேட்ட போது அவர் கொடுக்கவில்லை.
துணை நடிகர் கைது
இதையடுத்து இந்த மோசடி குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இயக்குனர் பாண்டிராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறுகையில், ''கைதான குமார் என்னிடம் நட்புடன் பழகி வந்தார். அவரை நம்பியே நான் பணத்தை கொடுத்தேன். ஆனால் கடைசியில் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்'' என்றார்.