அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.2½ லட்சம் மோசடி தந்தை, மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  மாற்றுத்திறனாளியிடம் ரூ.2½ லட்சம் மோசடி  தந்தை, மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம்

சேலம்,

மாற்றுத்திறனாளி

மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55), மாற்றுத்திறனாளி. இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் மனு ஒன்று கொடுத்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு வனவாசியை சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மகன் பாலசந்தர் ஆகியோர் அறிமுகமாகினர். பின்னர் அவர்கள் எனக்கு வருவாய்த்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன், பாலசந்தர் ஆகியோர் எனக்கு அரசு வேலைக்கான ஆணை ஒன்று வழங்கினார். இதை நம்பி அவர்கள் கூறியதன் பேரில் சென்னையை சேர்ந்த மணிமாலா என்பவரது வங்கி எண்ணுக்கு ரூ.2 லட்சம் அனுப்பினேன்.

மேலும் அவர்கள் எண்ணிடம் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டனர். பின்னர் தான் போலியாக ஆணையை தயாரித்து பணம் பெற்று அவர்கள் இருவரும் மோசடி செய்தது தெரியவந்தது.

3 பேர் மீது வழக்கு

இதையடுத்து அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மாற்றுத்திறனாளி முத்துசாமியிடம் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி மோசடி செய்த கோபாலகிருஷ்ணன், பாலசந்தர், மணிமாலா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story