மளிகை கடைக்காரரிடம் போலி தங்கநகையை கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி


மளிகை கடைக்காரரிடம் போலி தங்கநகையை கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 26 Nov 2022 8:00 PM GMT (Updated: 26 Nov 2022 8:01 PM GMT)
சேலம்

சூரமங்கலம்:-

சேலத்தில் மளிகை கடைக்காரரிடம் போலி தங்க நகையை கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்த டிப்-டாப் வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மளிகைக்கடைக்காரர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயினுலாதீன் (வயது 54). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த டிப்-டாப் வாலிபர்கள் 2 பேர், ஜெயினுலாதீன் கடைக்கு வந்துள்ளனர். அங்கு சாதுர்யமாக பேச்சை தொடங்கிய அவர், தங்களிடம் குறைந்த விலைக்கு தங்கமணி மாலை உள்ளது என்றும், அதனை ரூ.60 லட்சத்துக்கு தருகிறோம் என்று கூறியதுடன், தங்கமணி மாலையையும் எடுத்து காண்பித்துள்ளனர்.

இதனை பார்த்த ஜெயினுலாதீன் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த நபர்கள், நாங்கள் குரங்குச்சாவடி பகுதியில் தங்கி உள்ளோம். பணத்தை ஏற்பாடு செய்து விட்டு தகவல் சொல்லுங்கள் என்றனர். இதை நம்பிய ஜெயினுலாதீன், சில நாட்கள் கழித்து அந்த நபர்களை தொடர்பு கொண்டு முதலில் ரூ.25 லட்சம் தருகிறேன் என்றும், மீதி பணத்தை பின்னர் தருகிறேன் என்றும் கூறினார். அந்த நபர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

ரூ.25 லட்சம் மோசடி

அதன்படி குரங்குச்சாவடி பகுதிக்கு வந்த ஜெயினுலாதீன், ரூ.25 லட்சத்தை அந்த நபர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து தங்கமணி மாைலயை வாங்கியதாக தெரிகிறது. சிறிது தூரம் வந்த பிறகு, ஜெயினுலாதீன் பார்த்த போது அந்த மாலை போலியான தங்கமணி மாலை என்பது தெரிய வந்தது.

உடனே அந்த நபர்களை தேடி சென்றுள்ளார். அவர்களை காணவில்லை. இதுகுறித்து ஜெயினுலாதீன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story