புதையல் இருப்பதாக கூறி அரியலூர் பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த சாமியார், மனைவியுடன் கைது


புதையல் இருப்பதாக கூறி அரியலூர் பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த சாமியார், மனைவியுடன் கைது
x

அரியலூர் அருகே பில்லி சூனியத்தை எடுப்பதாகவும், புதையல் இருப்பதாகவும் கூறி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த சாமியார் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை குணப்படுத்த...

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேல மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது 2-வது மனைவி ஜூலி (வயது 48). கணவர் மற்றும் கணவருடைய முதல் மனைவி இறந்து விட்ட நிலையில், ஜூலி கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன்களுடன் வசித்து வருகிறார். அதில் ஒருவருக்கு 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2021-ம் ஆண்டு மகனை குணப்படுத்துவதற்காகவும் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் ஜூலி காவனூர் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த கொல்லிமலை சித்தர் தியாகம் டேனியல் (62) என்பவரை உறவினர்களுடன் சந்தித்துள்ளார்.

பில்லி சூனியம்-புதையல்

அப்போது தியாகம் டேனியல், ஜூலியிடம் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளார்கள் என்றும், அதனை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து தியாகம் டேனியல், அவரது மனைவி தீபா ஜெனிபர் (43) ஆகியோர் ஜூலியின் வீட்டிற்கு வந்து பூஜை செய்து 3 அடி ஆழத்தில் குழி தோண்டி, அதில் ஒரு செப்பு தகடு எடுத்து காண்பித்து, 8 அடி ஆழத்திற்கு கீழே புதையல் உள்ளது என்று ஆசை வார்த்தை கூறியும், எடுக்காவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று ஜூலியை பயமுறுத்தியும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று 15 நாட்கள் பழனிச்சாமி வீட்டில் தங்கி ஜூலி வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர்.

இதற்காக பழனிச்சாமி ஜூலியிடம் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பலமுறையாக மொத்தம் ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். எந்த வித புதையலும் எடுத்து தராத நிலையில் ஜூலி கோபத்துடன் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு பழனிச்சாமி, தியாகம் டேனியலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும் இதுபோன்று கோபமாக பேசினால் புதையல் எடுக்க உன்னை நரபலி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று ஜூலியை மிரட்டி உள்ளனர்.

தனிப்படை அமைப்பு

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூலி இதுகுறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு பழனிச்சாமியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தியாகம் டேனியல், தீபா ஜெனிபர் ஆகியோரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி, போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் வழிக்காட்டுதலின்பேரில், இன்ஸ்பெக்டர் குணமதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமரஜோதி, முருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

மனைவியுடன் சாமியார் கைது

தனிப்படை போலீசார் திண்டிவனம் அருகே பதுங்கியிருந்த தியாகம் டேனியல், தீபா ஜெனிபர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தியாகம் டேனியலை ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், தீபா ஜெனிபரை திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.


Next Story