வியாபாரியிடம் நூதனமுறையில் ரூ.3 லட்சம் மோசடி
வியாபாரியிடம் நூதனமுறையில் ரூ.3 லட்சம் மோசடி ெசய்தனா்
சிவகங்கை
சிவகங்கை, மதுரை ரோடு பாண்டிகோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 53). இவர் சிவகங்கையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் தன்னுடைய கடைக்கு குறைந்த விலையில் மொத்தமாக ஜெராக்ஸ் பேப்பர் வாங்க திட்டமிட்டார். இதற்காக கூகுளில் விற்பனையாளரின் விலாசத்தை தேடினார். அதில் இருந்து ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நபர் அசாமில் இருந்து பேசுவதாகவும், குறைந்த விலைக்கு மொத்தமாக பேப்பர் தருவதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ராஜா அவரிடம் 2 ஆயிரம் ரிம் ஜெராக்ஸ் பேப்பர் வாங்குவதற்கு முன்பணமாக ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 500-ஐ 6 தவணையாக செலுத்தியுள்ளார். பணத்தை பெற்று கொண்ட பின்னர் அந்த நபர் ராஜாவிற்கு பேசியபடி பேப்பரை அனுப்பவில்லையாம். இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.