ஏலச்சீட்டு நடத்தி ரூ.36 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு
ஏலச்சீட்டு நடத்தி ரூ.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த மும்தாஜ் பேகம் மற்றும் நிலோபர், பாபர் அலி, மஸ்ஜித் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதே பகுதியை சேர்ந்த சின்னையா, இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47) உள்பட 35 பேர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.ஆனால் ஏலச்சீட்டு தொகை கட்டி, காலம் முதிர்வடைந்த பின்னரும் பணத்தை கொடுக்காமல் 4 பேரும் இழுத்தடித்து வந்தனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று பாபர் அலி வீட்டை காலி செய்ய முயன்றார். அப்போது அவரை விஜயலட்சுமி மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி, ஏலச்சீட்டில் கட்டிய பணம் குறித்து கேட்டபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, பணம் தர முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 35 பேரிடம் ரூ.36 லட்சத்து ஆயிரத்து 275 மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இது குறித்து மும்தாஜ் பேகம், நிலோபர், பாபர் அலி, மஸ்ஜித் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.