பெண் தொழிலதிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி


பெண் தொழிலதிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி
x

பெண் தொழிலதிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக திண்டுக்கல் ஆடிட்டர் உள்பட 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி

மதுரையை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆடிட்டர். இவரது மனைவி அன்பரசி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மதுரையை சேர்ந்த 3 பேரிடம் அவர்களின் நிலத்தை விற்பனை செய்வதற்காக ரூ.25 லட்சம் கொடுத்து விற்பனை ஒப்பந்தம் செய்திருந்தேன். ஆனால் அந்த நபர்கள் அந்த நிலத்தை வேறு நபர்களிடம் விற்பனை செய்து விட்டனர்.

இதனால் பணத்தை திருப்பி தரக்கோரி மதுரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பணத்தை தராததால், உத்தமபாளையத்தில் உள்ள அவர்களின் சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை நடத்துமாறு எனது கணவரின் நண்பரான திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்த ஆடிட்டரான சீனிவாசன் என்பவரிடம் வழக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டது. அவர் தேனியை சேர்ந்த வக்கீல் குருராதாகிருஷ்ணன் என்பவரை வழக்கு நடத்த நியமித்தார். இந்நிலையில் சீனிவாசனும், குருராதாகிருஷ்ணனும் பல்வேறு தேதிகளில் அவர்கள் 3 பேரிடம் இருந்தும் ரூ.44 லட்சத்து 75 ஆயிரம் பெற்றுக் கொண்டு எனது கையொப்பம் இல்லாத ஆவணத்தை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கை வாபஸ் பெற்று விட்டனர்.

அவர்கள் பெற்ற பணத்தில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு மீதம் ரூ.36 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் அதற்குரிய வட்டி தொகையை தராமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் மிரட்டுகின்றனர் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த மனு மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சீனிவாசன், குருராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீதும் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story