வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4¾ லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4¾ லட்சம் மோசடி கலெக்டர் அலுவலக ஊழியர் மீது புகார்
விழுப்புரம்
கண்டாச்சிபுரம் தாலுகா வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி(வயது 61) என்பவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மருமகள் கனகவள்ளி என்பவரின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வேன். இதன் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் வி.கள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தின் காரணமாக அவரிடம், எனது மருமகளுக்கு சத்துணவு பொறுப்பாளர் அல்லது அங்கன்வாடி மைய ஊழியர் வேலை வாங்கித்தருமாறு கேட்டேன். அதற்கு ஒப்புக்கொண்ட அவர், ரூ.5 லட்சம் தேவைப்படும் என்றும் பணம் கொடுத்தால் வேலை வாங்கித்தருகிறேன் என்று உறுதியளித்தார். இதை நம்பிய நான், அவரிடம் சென்று ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், இதுநாள் வரையிலும் எனது மருமகளுக்கு வேலை ஏதும் வாங்கித்தரவில்லை. பலமுறை நேரில் சந்தித்து கேட்டதற்கு இன்னும் சில நாட்களில் வேலை வந்துவிடும் என்று கூறி காலம் தாழ்த்திக்கொண்டே வந்தார். ஆனால் இதுநாள் வரையிலும் அவர், எனது மருமகளுக்கு வேலை வாங்கித்தரவில்லை. அதற்காக பெற்ற பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுபோல் பலரிடம் அவர், பணம் பெற்று மோசடி செய்து வந்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வருகிற திங்கட்கிழமையன்று(24-ந் தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.