குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4½ லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா சிறுவாடி கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து ரூ.750 செலுத்தினால் ரூ.23,500-ஐ 15 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு விளம்பரம் வந்தது.
இதைப்பார்த்த அப்பெண், அந்த நபருடன் சாட்டிங் செய்து பேசியபோது எதிர்முனையில் பேசிய நபர் ஒருவர், அப்பெண்ணிடம் சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதனை நம்பிய அப்பெண், அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 497-ம், தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 550-ம், தனது அண்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தையும், தனது பெரியப்பா மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்து 500-யும் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்து 547-ஐ 22 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார்.
பெண்ணிடம் பணம் மோசடி
பணத்தை பெற்ற அந்த நபர்கள், அப்பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பித்தராமலும், மேலும் பல்வேறு காரணங்களை கூறி அதிக பணம் அனுப்பி வைக்குமாறும் கேட்டு ஏமாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.